சென்னை கீழ்பாக்கத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசித்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் தனி அமைப்பை உருவாக்கியுள்ள ஓ.பி.எஸ், தற்போது அந்த அமைப்பை ஒரு முற்றிலும் தனி அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடைபெற்ற தனி ஆலோசனையில், ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கக்கூடாது” என்ற முக்கிய அறிவுரையை தனது ஆதரவாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அதிமுகவுடன் யதார்த்தமான கூட்டணி வாய்ப்பு உருவாகும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், கடுமையான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்பதே அவரின் பார்வை என கூறப்படுகிறது. இந்த அறிவுறுத்தல், எதிர்கட்சியான திமுகவுக்கு எதிராகவும், ஒன்றிணைந்த எதிரணியை உருவாக்கும் நோக்கத்துடனும் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
