தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தில் (த.வெ.க) இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. கடலூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (எம்.பி), கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வரும் அருண்மொழி தேவன், அ.தி.மு.க-வின் கடலூர் மாவட்ட முக்கிய முகமாக விளங்குபவர்.

தற்பொழுது அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தி மற்றும் தொகுதிப் பணிகள் காரணமாக, அவர் தனது கட்சிப் பொறுப்புகளையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்துவிட்டு முதல்வர் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க-வில் இருந்து மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாகத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில், தற்பொழுது ஐந்தாவதாக அருண்மொழி தேவனும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தத் தொடர் ராஜினமாக்கள் மற்றும் கட்சித் தாவல்கள் காரணமாகத் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் பலம் தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், த.வெ.க-வின் இந்த அதிரடி அரசியல் நகர்வு கடலூர் மாவட்ட அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.