மேற்கு வங்காளத்தில் கடந்த மே 4-ஆம் தேதி பா.ஜ.க முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அங்கு முன்னாள் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியின் தலைமையிலான அரசு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உள்ளூர் புள்ளிகளால் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களை புல்டோசர்கள் கொண்டு அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கி வருகிறது.

கொல்கத்தாவின் பல பகுதிகளில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டி.எம்.சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்குச் சொந்தமான சொத்துகளுக்குக் கொல்கத்தா மாநகராட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, அக்கட்சியின் கஸ்பா தொகுதி எம்.எல்.ஏ ஜாவேத் கானின் கட்டடத்திற்கும் இடிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசின் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளைக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மறுபுறம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது ஒட்டுமொத்த ராஜினாமா படலமும், கைது நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. பர்தமான் மற்றும் பிர்பூம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கட்டாயப் பணம் பறித்தல், மிரட்டல் போன்ற புகார்களில் டி.எம்.சி-யின் முக்கியப் புள்ளிகள் மற்றும் நகராட்சிப் பிரதிநிதிகள் டஜன் கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புதிய அரசுக்கு அஞ்சி, 91 கவுன்சிலர்கள் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இதில் பல கவுன்சிலர்கள் பா.ஜ.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி)  பதவியை ராஜினாமா செய்ததோடு, தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனத்தின் தவறான உத்திகளே காரணம் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது திரிணாமுல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.