மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஒருவர், தலைநகர் தில்லியில் உள்ள பல்வேறு தூதரக அதிகாரிகளுக்கு Alphonso மாம்பழப் பெட்டிகளை அன்பளிப்பாக அனுப்பிய விவகாரம், இந்தியா – சீனா இடையே புதிய ராஜதந்திரப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்பி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ தூதரக உறவு இல்லாத, ஆனால் வர்த்தகத் தொடர்பில் உள்ள தைவான் நாட்டின் ‘தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையத்திற்கும் ஒரு மாம்பழப் பெட்டியை அனுப்பியுள்ளார்.
தைவானைத் தன் நாட்டின் ஒரு கிளர்ச்சிப் பகுதியாகக் கருதும் சீனாவின் உளவு அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கண்டறிந்து பெய்ஜிங்கிற்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, புது தில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அலுவலகத்திற்கு சீனா தனது கடுமையான எழுத்துப்பூர்வ எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இதனால் பதற்றமடைந்த அந்த எம்பியின் அலுவலகம் தற்பொழுது இந்த விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் சீனா – தைவான் இடையே நீண்ட காலப் பகை நீடித்து வரும் சூழலில், தைவானைத் தனி நாடாக அங்கீகரிக்கும் எந்தவொரு செயலையும் சீனா வன்மையாக எதிர்த்து வருகிறது. மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையிலான உறவு ஏற்கனவே சுமுகமாக இல்லாத நிலையில், இந்திய மக்கள் பிரதிநிதி ஒருவர் தைவானுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிசு அனுப்பியதை சீனா தங்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கிறது.
இந்தியா – தைவான் இடையே 12 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் மற்றும் மின்னணு வர்த்தகம் சுமுகமாக நடந்து வரும் வேளையில், கொங்கண் பகுதியின் சுவையான இந்த மாம்பழப் பெட்டி, இரு நாட்டு அரசியல் அரங்கில் எதிர்பாராத விதமாக வெடிபொருளாக மாறியுள்ளது தில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
