தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் தொகுதியை பா.ஜ.க.விற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தொகுதிப் பங்கீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், அதிமுக வலுவாக உள்ள பல தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

இதன் உச்சகட்டமாக, ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதை அந்தத் தொகுதி அதிமுகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தங்களது குமுறலை வெளிப்படுத்தும் வகையில், ராமநாதபுரம் நகர் முழுவதும் அதிமுகவினர் அதிரடி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு,

“ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இரட்டை இலையிலேயே வேண்டும்; தாமரை வேண்டாம்!”

“வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள ராமநாதபுரத்தை பாஜகவிற்கு ஒதுக்கிய முடிவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ராமநாதபுரத்தில், கூட்டணி தர்மத்தையும் மீறி அதிமுகவினரே பாஜகவிற்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. களப்பணியில் அதிமுகவினர் ஒத்துழைப்பு அளிப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் ஏற்கனவே திமுக அமைச்சர்கள் 14 பேருக்கு எதிராக அதிமுக நேருக்கு நேர் போட்டியிடாமல் அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது விவாத பொருளாக மாறி உள்ள நிலையில் தற்போது சொந்த கட்சிக்குள்ளையே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.