சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீஸார் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங் பயிலும் மாணவி ஒருவர், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், நான் படிக்கும் அதே கல்லூரியில் பாடம் நடத்தி வந்த ஆசிரியர் கடந்த 3 ஆண்டுகளாக நேரிலும், தொலைபேசியிலும் எனக்குத் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார். ஆரம்பத்தில் குடும்பக் கஷ்டத்தை அறிந்து கொண்டு உதவி செய்வது போலவும், தந்தை போன்றவர் என்றும் கூறிப் பேசத் தொடங்கினார். கல்வி உதவி மற்றும் இன்டர்ன்ஷிப் பெற்றுத் தருவதாகக் கூறி என் நம்பிக்கையைப் பெற்றார்.

ஆனால், காலப்போக்கில் அவரது பேச்சு ஆபாசமாக மாறியது. பாடங்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, எனது உள்ளாடைகள் குறித்தும் பெண்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்தும் பேசுமாறு வற்புறுத்தினார். வகுப்பு எடுக்க வேண்டிய பேராசிரியர், என்னை ‘படுக்கைக்கு’ வருமாறு அழைத்து மன ரீதியாகத் துன்புறுத்தினார். நான் அவரைத் தடுத்தபோது, எனது நண்பர்களுக்குப் போன் செய்து என்னை மிரட்டினார் என்று கூறப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் ஞானவேல் பாபு உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மேலும் 4 மாணவிகள் அந்தப் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் ஞானவேல் பாபு தலைமறைவானார். தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், அவர் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீஸார் அவரை அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் முன்னதாக, சம்பந்தப்பட்ட பேராசிரியரை உடனடியாகக் கைது செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக வாயில் அருகே மாணவர் அமைப்பினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்புநிலவியது.