எகிப்து நாட்டின் புகழ்பெற்ற ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில் உள்ள பண்டைய கல்லறைகளில், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி, சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழி கல்வெட்டுகளைப் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி.பி. 1 முதல் 3-ஆம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதிகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்திருப்பதை இந்தக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

குறிப்பாக, ‘சிகை கொற்றன்’ (Cikai Koṟṟaṉ) என்ற பெயர் மட்டும் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளது. இது அந்தத் தமிழரின் செல்வாக்கையும், அவர் அங்கு ஒரு சுற்றுலாப் பயணி போலச் சுற்றிப் பார்த்ததையும் காட்டுகிறது. ’கோப்பான் வந்தேன் பார்த்தேன்’ (Kopāṉ varata kantan) போன்ற வாசகங்கள், அக்கால கிரேக்கப் பயணிகள் பயன்படுத்திய “வந்தேன், பார்த்தேன்” என்ற அதே பாணியில் தமிழிலும் செதுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடல் கடந்து வணிகம் செய்தது மட்டுமின்றி, எகிப்தின் உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த புனிதத் தலங்களையும், கலைச் சின்னங்களையும் தமிழர்கள் ரசித்துள்ளனர் என்பது இப்போது ஆதாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. சிகாகோ முதல் எகிப்து வரை தமிழர்களின் தடம் பரவிக் கிடப்பது, உலக வரலாற்றில் தமிழகத்திற்கு இருந்த உன்னதமான இடத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகிறது.
