ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியைத் தொடர்ந்து, அவரது சிறுவயது நண்பரான அயான் ராஜும் கிரிக்கெட் மைதானத்தில் ரன் மழை பொழிந்து சாதனை படைத்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 16 வயதுக்குட்பட்டோருக்கான (Under-16) லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில், சமஸ்கிருதி கிளப் அணிக்காக விளையாடிய 14 வயதே ஆன அயான் ராஜ், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 83 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 35 பவுண்டரிகள் மற்றும் 9 அசாத்திய சிக்ஸர்களின் உதவியுடன் 210 ரன்கள் குவித்து அதிரடி இரட்டைச் சதம் விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

அயான் ராஜின் இந்த அதிவேக இரட்டைச் சதத்தின் பலத்தால், அவரது அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 464 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அயான் ராஜ் உள்ளூர் கிரிக்கெட்டில் இவ்வாறு சாதனை படைப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முந்தைய சீசன்களில் ஒரு போட்டியில் அவுட் ஆகாமல் 327 ரன்கள் குவித்து முச்சதம் விளாசியும் அவர் சாதனை படைத்துள்ளார்.

தற்போது இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வரும் தனது நண்பன் வைபவ் சூர்யவன்சியைப் போலவே, அயான் ராஜும் பீகார் கிரிக்கெட்டின் அடுத்த வளர்ந்து வரும் நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார். இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினால், விரைவில் பீகார் மாநில அணிக்கும், அதன்பின் இந்திய தேசிய அணிக்கும் விளையாடி நாட்டின் பெருமையை உயர்த்துவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.