மகாராஷ்டிர மாநிலம் சாங்க்லி மாவட்டத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போலப் பயணிகள் நெரிசலுடன் இயங்கிக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக மிகக் கொடூரமான முறையில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பேருந்துகளின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கிப்போய் இடிபாடுகளுக்குள் பயணிகள் சிக்கிக் கிடந்தக் காட்சி அனைவரையும் நெஞ்சை நடுங்க வைத்தது.

இந்தக் கொடூர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த ஏராளமான பயணிகள் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் அலறித் துடித்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும் உள்ளூர் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காயமடைந்த பயணிகளை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். அதிவேகமாக வந்ததே அல்லது ஓட்டுநரின் கட்டுப்பாட்டைப் பேருந்து இழந்ததே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்குப் பெயர் பெற்ற அரசுப் பேருந்துகளே இப்படி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்த பலருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.