அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை 40 முதல் 50 சதவீதமும் இந்த வழியாகவே கொண்டு வரப்படுகிறது.

ஈரான் இந்தத் தடயத்தை மூடியுள்ளதால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. ஈரானின் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் இந்த வழியைக் கடக்க முடியாது என்பதால் உலக நாடுகள் பெரும் கவலையில் இருந்தன.

இந்த இக்கட்டான சூழலில், கத்தார் நாட்டின் இயற்கை எரிவாயு கப்பல்களுக்கு மட்டும் ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளது. ‘ரசிதா’ மற்றும் ‘அல் தயீன்’ ஆகிய இரண்டு கத்தார் கப்பல்கள் ஈரானின் ஐஆர்ஜிசி படையின் அனுமதியுடன் ஓமான் வளைகுடா நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

உலகிற்குத் தேவையான இயற்கை எரிவாயுவில் 20 சதவீதத்தை கத்தார் வழங்கி வருவதால், இந்த அனுமதி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வரும் நாட்களில் கத்தாரின் மற்ற கப்பல்களுக்கும் ஈரான் அனுமதி அளித்தால், எரிசக்தி தட்டுப்பாடு நீங்கி நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.