அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மீது கேவலமாக உருவாக்கப்பட்ட ஏஐ (AI) வீடியோ ஒன்றை, டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒபாமா “சட்டத்திற்கு உயராக எவரும் இல்லை” என பேசும் காட்சியுடன் தொடங்கி, பின்னர் அவர் கைவிலங்கிடப்பட்டு, குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்படுகிறார். அதே நேரத்தில் ட்ரம்ப் அருகில் அமர்ந்து சிரிக்கிறார் எனக் காட்டப்படுகிறது.

இந்த வீடியோவை உருவாக்கியது ஒரு ஏஐ சித்தரிப்பு என்பதையும், அது யதார்த்தம் அல்ல என்பதையும் ட்ரம்ப் எங்கிலும் குறிப்பிடவில்லை, இது தான் பரபரப்பிற்கும் கண்டனங்களுக்கு காரணமாகியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அதிபரை இழிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளி, அமெரிக்க அரசியல் சூழலில் தீவிர விமர்சனங்களை கிளப்பியுள்ளது. ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமின்றி, நியாயமான அரசியல் ஒழுங்கமைப்பை ஆதரிப்பவர்கள் பலரும் இது மோசமான முன்னுதாரணம் எனக் கண்டித்துள்ளனர்.

இந்த விவகாரத்தின் பின்னணியில், 2016 அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதை ஒபாமா குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் தேசிய புலனாய்வு இயக்குநரான துளசி கபாட் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு, அதுவும் முன்னாள் அதிபர்களை நோக்கி நடத்தப்படுவது அமெரிக்க அரசியல் புதிய கலவரத்தை உருவாக்கி உள்ளது. இது மாதிரியான போலியான தகவல்களின் எதிரொலியைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, செய்தியாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
