அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் சகாஸ் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ரித்தேஷ் கல்ரா (53). இவர் அப்பகுதியில் மருத்துவ உரிமம் பெற்ற போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் ரித்தேஷ் மீது அதிர்ச்சிகரமான புகார் எழுந்துள்ளது.
அதாவது கிளினிக்கிற்கு வரும் போதை பொருள் அடிமையானவர்களுக்கு அதிலிருந்து விடுபட மருந்து கொடுப்பதற்கு பதிலாக அதிக வீரியம் நிறைந்த ஆக்சிகோடன் என்ற வகையான மருந்துகளை கொடுத்து அவர்களது போதைப் பழக்கத்தை அதிகப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார.
அவர்கள் நோயிலிருந்து விடுபடுவதற்கு பதிலாக நோயிலேயே நீடிக்க வழி செய்ததாகவும், மருந்து தருகிறேன் என்ற பெயரில் அவர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் பெண் ஒருவர் மருத்துவர் ரித்தேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வந்த பெண்ணை பலமுறை மருந்து வாங்க அழைத்து ஒவ்வொரு முறையும் பல்வேறு வடிவிலான பாலியல் விருப்பத்திற்கு ரித்தேஷ் பயன்படுத்தியுள்ளார் என அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை அளித்துள்ளார். இது குறித்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை வாதாடிய வழக்கறிஞர் அலினாஹப்பா, பொறுப்போடு மக்களை போதையில் இருந்து மீண்டு வர செய்வதற்கு பதிலாக டாக்டர் ரித்தேஷ் அவர்களை அதிலேயே மூழ்கடித்து பாலியல் உறவுக்கு பயன்படுத்தி உள்ளது பெரும் மோசடியாகும். மேலும் நியூ ஜெர்சியின் பொது சுகாதார நலத்திட்டத்திலும் மோசடி செய்துள்ளார் என கூறினார்.
இதனை அடுத்து ரித்தேஷ் வீட்டுக்காவளில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ உரிமமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இனி மருத்துவப் பணியிலோ அல்லது மருந்துகளை எழுதிக் கொடுக்கவோ கூடாது என தடை விதித்துள்ளது.
இந்நிலையில் குற்றம் முழுவதும் முழுமையாக நிரூபிக்கப்பட்டால் சட்ட விரோதமான மருந்து விநியோகித்ததற்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் சுகாதார நலன் மோசடிக்காக தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குற்றத்திற்கும் முறையே கிட்டத்தட்ட இந்திய மதிப்பின்படி 10 கோடி ரூபாய் அளவில் அபராதமும் விதிக்க படலாம் என கூறப்படுகிறது.
