சென்னை மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ரஞ்சித் குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் வாலிபர்கள் சிலர் கால்பந்து விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அஜித் என்பவர் ரஞ்சித்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அஜித்தை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் படுகாயமடைந்த ரஞ்சித் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் தாக்கியதால் காயம் அடைந்த அஜித் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
அதாவது அஜித் சிறுவனாக இருந்தபோது அஜித்தின் உறவுக்கார பெண்ணுக்கும், ரஞ்சித் குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு நாள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அஜித் பார்த்தார். உடனே ரஞ்சித் குமார் அஜித்தை அடித்து வீட்டில் இருந்து விரட்டியதாக தெரிகிறது.
நாட்களும் கடந்தும் அஜித் ரஞ்சித் மீது தீராத கோபத்தில் இருந்தார். அஜித் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று ரஞ்சித் குமார் தனியாக இருந்தபோது அஜித் கத்தியால் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
