திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையை முன்னிட்டு தர்மலிங்கத்தின் மகள் இரவு ஊருக்கு புறப்பட்டார்.
அவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து நாங்குநேரி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார். ஆனால் நாங்குநேரி வந்ததும் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் மகளுக்காக காத்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் காரில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் அரசு பேருந்தை துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.
பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தர்மலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தர்மலிங்கம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
