அயர்லாந்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை அவரது முதலாளி ‘உருளைக்கிழங்கு’ என்று அழைத்து தொடர்ந்து கிண்டல் செய்து வந்த சம்பவம், தற்போது சட்ட ரீதியான பெரும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. தன்னை இன ரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் முதலாளி இவ்வாறு அழைப்பதாகக் கருதிய அந்தப் பெண், அந்நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மேலும் சுமார் 6 மாத காலமாக இந்தப் பெயரால் அழைக்கப்பட்டு மன ரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், நிதி நெருக்கடி காரணமாக வேலையை விட்டு வெளியேற முடியாமல் இந்தக் கொடுமையை அனுபவித்ததாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சம்பந்தப்பட்ட பெண்ணின் மன உளைச்சலை அங்கீகரித்து அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பெண்ணுக்கு ரூ.29 லட்சம் நஷ்டஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணியிடங்களில் சக ஊழியர்களையோ அல்லது கீழ் பணிபுரிபவர்களையோ அவர்களின் நிறம், இனம் அல்லது தோற்றத்தை வைத்து கேலி செய்வது சட்டப்படி குற்றம் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது. பணியிடத்தில் கண்ணியமும் மரியாதையும் மிக அவசியம் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.