ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அந்நாட்டு ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. பல மணிநேரம் அல்லது பல நாட்கள் ஆய்வு செய்ய வேண்டிய தரவுகளை ஏஐ கருவிகள் மூலம் சில நொடிகளில் முடித்து, எதிரிகளை விட வேகமாக முடிவுகளை எடுக்க முடிவதாக ராணுவத் தளபதி பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தாக்குதல் குறித்த இறுதி முடிவை எப்போதும் மனிதர்களே எடுப்பார்கள் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தெற்கு ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம், தவறான உளவுத் தகவலால் நேர்ந்ததா அல்லது ஏஐ தொழில்நுட்பத்தின் பிழையா என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மனித குலத்திற்கே ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. முடிவெடுக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் ஒப்படைப்பது தார்மீகச் சரிவு என்று கூறியுள்ள சீன பாதுகாப்பு அமைச்சகம், இது ‘டெர்மினேட்டர்’ திரைப்படத்தில் வருவது போல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகமே அழியும் சூழலுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது ராணுவத்தில் ஏஐ பயன்பாட்டை அதிகரிக்க ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வரும் நிலையில், சீனாவின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
