தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (35). இவரது மனைவி சவுமியா (30), அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே, அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் திலீப் (28) என்பவருடன் சவுமியாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் தொடர்பை ரமேஷ் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட சவுமியா திட்டமிட்டார். ரமேஷ் பெயரில் உள்ள ரூ.2 கோடி காப்பீடுத் தொகையை அபகரித்து, கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட சவுமியா, திலீப் மற்றும் ரவுடி கும்பலின் உதவியுடன் ரமேஷைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்.
கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி இரவு, உணவில் அதிக அளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து ரமேஷை மயக்கமடையச் செய்த சவுமியா, பின்னர் திலீப் மற்றும் அவரது கூட்டாளிகளை வரவழைத்து ரமேஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
மறுநாள் காலையில் ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்களை நம்ப வைத்து இறுதிச் சடங்குகளை முடித்து உடலை அடக்கம் செய்தனர். எனினும், வெளிநாட்டில் வசிக்கும் ரமேஷின் தம்பி கோதாரி, தனது அண்ணனின் சடலத்தில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், காப்பீடு பணத்துக்காக அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடூரக் கொலை அம்பலமானது.
இதனையடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் ரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சவுமியா, கள்ளக்காதலன் திலீப், அவரது தம்பி அபிஷேக் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜிதேந்தர், ஸ்ரீராம், ராகேஷ் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
