மத்தியப் பிரதேசத்தில் 73 வயது பாஜக எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் 31 வயது மகன் மஹாரியமான் சிந்தியாவின் காலில் விழ முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேவேந்திர குமாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மஹாரியமான், அவருக்கு கேக் ஊட்டி விட்டு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினார். இதில் நெகிழ்ந்து போன எம்.எல்.ஏ, தன்னை விட 41 வயது இளையவரான மஹாரியமானின் கால்களைத் தொட்டு வணங்க முற்பட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, முதியவர் ஒருவர் இளைஞரின் காலில் விழுவதா எனப் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த எம்.எல்.ஏ தேவேந்திர குமார், மஹாரியமான் தனக்காகப் பாடியது தன்னை உணர்ச்சிவசப்பட வைத்ததாகவும், இது தனது தனிப்பட்ட மற்றும் கலாச்சார ரீதியான மரியாதை என்றும் கூறினார்.
மேலும், இளைஞர்களின் கால்களைத் தொடக்கூடாது என்று அரசியலமைப்பில் எங்கும் எழுதப்படவில்லை எனவும், இதை வைரலாக்குபவர்கள் பற்றித் தனக்குக் கவலையில்லை என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மரியாதையின் நிமித்தமாகச் செய்த இந்தச் செயல், தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
