தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்குள், “இனிமேல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது மட்டும் போதாது, ஆட்சியிலும் பங்கு வேண்டும்” என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், “இனி நாங்கள் வெறும் 12-வது ஆட்டக்காரராக இருக்க முடியாது; அமைச்சரவையில் பங்கேற்று மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.

​இதற்கிடையே, சென்னையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. “ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. 2026-ன் துணை முதல்வரே!” எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை முன்னிறுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன் ‘ஆட்சியில் பங்கு’ பற்றிப் பேசி வரும் நிலையில், காங்கிரஸும் அதே கோரிக்கையைக் கையில் எடுத்திருப்பது திமுக-காங்கிரஸ் உறவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.