தெலுங்கானா மாநிலத்தில் விவாகரத்திற்குப் பின் குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் மனமுடைந்த தந்தை, தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் தீலேர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமுலு (32). இவருக்கும் சுஜாதா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரித்திகா (8) என்ற மகளும், சைதன்யா (6) என்ற மகனும் இருந்தனர்.

திருமணமானது முதல் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தொடர் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் உச்சகட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டு குழந்தைகளும் தந்தை சிவராமுலுவின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

மனைவியைப் பிரிந்த துயரத்திலும், குழந்தைகளைத் தனியாகப் பராமரிக்க முடியாமலும் சிவராமுலு கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி சிவராமுலு தனது இரண்டு குழந்தைகளையும் விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு குடிசையில் குழந்தைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சிவராமுலு அவர்களைக் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

பின்னர், குழந்தைகளின் உடல்களை அருகில் இருந்த ஏரியில் வீசிய சிவராமுலு, தானும் பூச்சி மருந்தைக் குடித்ததோடு, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஏரியில் இருந்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.