மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் கே. லால்ரெம்ருவாட்டா (38), உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலேயே மயங்கி விழுந்து காலமானார். இந்தத் துயரச் சம்பவம் மிசோரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் காலித் நினைவு இரண்டாம் பிரிவு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. புதன்கிழமை (ஜனவரி 7) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘வெங்னுவாய் ரைடர்ஸ்’ மற்றும் ‘சௌன்புய்’ ஆகிய அணிகள் மோதின. வெங்னுவாய் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய லால்ரெம்ருவாட்டா, ஆட்டத்தின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டதே உயிரிழப்பிற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லால்ரெம்ருவாட்டா ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் மிசோரம் மாநில அணிக்காக இரண்டு முதல் தர (ரஞ்சி டிராபி) போட்டிகளிலும், 7 டி20 (சையத் முஷ்டாக் அலி டிராபி) போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மாநில அணிக்காக விளையாடிய பிறகும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மிசோரம் கிரிக்கெட் சங்கம் (CAM), அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் நடைபெறவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்துள்ளது.
மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் லால்ஹிங்லோவா ஹ்மர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “லால்ரெம்ருவாட்டாவின் மறைவு மிசோரம் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வீரரின் இந்தத் திடீர் மறைவு, அவருடன் விளையாடிய சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
