உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவியைப் படிக்க வைத்து சப்-இன்ஸ்பெக்டராக மாற்றிய கணவர் மீது, அதே மனைவி வரதட்சணை கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜோதி மௌரியா’ வழக்கை நினைவூட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹாப்பூர் மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் பாயல் ராணி. இவர் தற்போது பரேலி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக (சப்-இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஹாப்பூர் மாவட்ட எஸ்.பி-யிடம் அவர் அளித்த புகாரில், “எனக்கும் பில்குவா பகுதியைச் சேர்ந்த குல்ஷன் என்பவருக்கும் கடந்த 2022 டிசம்பர் 2-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது வீட்டார் போதுமான வரதட்சணை கொடுத்தனர்.

இருப்பினும், எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டார் கூடுதலாக ரூ.10 லட்சம் பணமும், ஒரு காரும் கேட்டு என்னைத் துன்புறுத்தினர். நான் மறுத்ததால் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்தனர். ஆசிட் வீசிக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் குல்ஷன் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கணவர் குல்ஷன், மாவட்ட எஸ்.பி குன்வர் ஞானஞ்சய் சிங்கை நேரில் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “நானும் பாயல் ராணியும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். 2021-ல் நீதிமன்றத் திருமணம் செய்து கொண்ட நாங்கள், பின்னர் 2022-ல் இருவீட்டார் சம்மதத்துடன் வரதட்சணை ஏதுமின்றி முறைப்படி திருமணம் செய்தோம்.

பாயல் ராணியை உயர்கல்வி படிக்க வைத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயார் செய்தது நான்தான். எனது உழைப்பில் கிடைத்த வருமானம் முழுவதையும் அவரது படிப்புக்காகச் செலவிட்டேன். தற்போது அவர் அதிகாரியாக மாறியவுடன், என்னையும் எனது குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பொய்யான வரதட்சணை புகாரை அளித்துள்ளார். இது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

படிக்க வைத்து ஆளாக்கிய கணவருக்கு எதிராகவே பெண் அதிகாரி புகார் அளித்துள்ள இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. “உண்மை என்ன என்பது உரிய விசாரணைக்குப் பிறகே தெரியவரும்” என ஹாப்பூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.