தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை (செப்டம்பர் 20) நாகை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டத்தில் வந்தார். அங்கு ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி, விஜய்யின் பிரச்சார வாகனம் திருவாரூர் தெற்கு வீதியை அடைந்தது. விவசாயிகளின் துயரைப் புரிந்துகொள்ளும் வகையில் தோளில் பச்சைத் துண்டு அணிந்து, அலைமோதும் மக்கள் கூட்டத்திடையே பேசிய விஜய், முதல்வர் மு.க. ஸ்டாலினின் சொந்த மண் திருவாரூரை இலக்காகக் கொண்டு கடுமையாக விமர்சித்தார்.

இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவருடைய வேலை என்ன தெரியுமா? முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வதுதான் அவருடைய வேலை என்று விஜய் கூறினார். மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், திருவாரூர் மாவட்டம் கருவாடாகக் காய்கிறது என்று விஜய் தெரிவித்தார். இதைப் பெருமையாகவும் சவாலாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். திருவாரூர் மாவட்டம்தான் அவர்களின் சொந்த மாவட்டம் என்று பெருமையாகப் பேசுகிறார்கள் என்று விஜய் சாடினார்.

மேலும், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடக்கூடும். மக்களிடம் அதைச் சொல்ல முடியாது. ஏனென்றால், நீங்கள்தானே மக்களுடன் இல்லையே என்று விஜய் கேள்வி எழுப்பினார். இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்பச் சொல்கிறேன் என்று விஜய் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு பேசியதன் மூலம், முதல்வர் ஸ்டாலினின் குடும்ப அரசியல் மற்றும் மக்கள் நலப் புறக்கணிப்பை விஜய் கடுமையாக வெளிப்படுத்தினார். இதற்கு முன், திருவாரூரில் விஜய்யின் பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்புப் பணிகளுக்காக அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அலைமோதும் தொண்டர்கள் கூட்டத்தின் உற்சாகத்தில் விஜய் திருவாரூரில் இருந்து விடைபெற்றார். டிவிகே என்ற உற்சாகக் கோஷங்களுடன் பிரச்சாரம் முடிந்தது.