பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமிழகம் முழுவதும் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 13-ந் தேதி திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், இன்று (சனிக்கிழமை) நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். ஏற்கனவே, விக்கிரவாண்டி, மதுரையில் பிரமாண்ட மாநாடுகளை நடத்திய விஜய், அப்போது தொண்டர்கள், ரசிகர்களைச் சந்திக்க மாநாட்டு மேடையில் இருந்து 800 மீட்டர் தூரம் நடந்து செல்லும் அளவுக்கு சிறப்புப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை, சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திறந்தவெளி வேனில் நின்றபடி தொண்டர்களுக்கு மத்தியில் கைகூப்பி வணங்கியபடி சென்றார். அவரது வாகனம் மேடை நோக்கி செல்வதற்காக தனியாக தார் சாலையே அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் செய்திருந்தனர். மேலும், விஜய் வருகையையொட்டி இரு மாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது, அரசியல் வட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வின் இந்த நடவடிக்கை, விஜய்யின் பிரசாரத்தை எதிர்கொள்ளும் வகையில் மக்களிடம் தங்கள் ஆட்சியின் நல்ல செயல்களை காட்டும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இது தமிழக அரசியலில் போட்டியின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.