ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் (Minab) நகரில் செயல்பட்டு வந்த பெண் குழந்தைகள் பள்ளி மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், சுமார் 150 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உலகையே உலுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலின் முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) முகாம் இருந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குத் தாங்கள் தான் காரணமா என்பது குறித்து அமெரிக்க ராணுவம் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்க தற்காப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), “நாங்கள் ஒருபோதும் பொதுமக்களை இலக்கு வைக்கமாட்டோம், ஆனால் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை அமெரிக்காவின் ஏவுகணை தான் இந்தப் பள்ளியைத் தாக்கியது என்பது உறுதியானால், சர்வதேச சட்டப்படி இது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படும். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் அடங்கிய சிறிய சவப்பெட்டிகள் ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் காண்போர் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
