ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு ராணுவ நடவடிக்கையில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரின் கொடூரத்திற்குச் சான்றாக, தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தீவிரத் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. முதல் நாள் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகள் மொஜிதபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற ராணுவத் தாக்குதல்களில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக, தெற்கு ஈரானில் இயங்கி வந்த பெண்கள் தொடக்கப் பள்ளியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 175 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மற்றும் பள்ளித் தாக்குதலில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு சீனா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. சீன செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society of China) மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 லட்சம் டாலர் (சுமார் ரூ.1.84 கோடி) நிதியுதவி வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் குவூ ஜியாகுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரினால் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு சீனா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரைப் போக்க இந்த நிதியுதவி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான்-அமெரிக்கா மோதலால் மத்திய கிழக்கு ஆசியாவே போர்க்களமாக மாறியுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் தொடங்கிய இந்தப் போர், தற்போது பெருமளவிலான உயிர்ச்சேதங்களையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதால், அமைதி திரும்ப சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
