இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய அசாதாரண சூழலில், போர் அல்லது அவசர காலங்களைக் கருத்தில் கொண்டு நாடுகள் தங்கள் வசம் வைத்திருக்கும் ‘மூலோபாய கச்சா எண்ணெய் இருப்பு’ (Strategic Petroleum Reserve) குறித்த விவாதம் உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் இருப்பை அதிகம் வைத்திருக்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.  அதன்படி சீனா சுமார் 900 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் சுமார் 470 மில்லியன் பீப்பாய்கள் இருப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா  வசம் சுமார் 415.4 மில்லியன் பீப்பாய்கள் இருப்பும், தனியார் நிறுவனங்கள் வசம் சுமார் 439.3 மில்லியன் பீப்பாய்கள் வர்த்தக இருப்பும் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனி சுமார் 110 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயையும், 67 மில்லியன் பீப்பாய்கள் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களையும் கையிருப்பில் வைத்துள்ளது.

அதன்பிறகு இந்தியா சுமார் 39 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளது. சர்வதேச எரிசக்தி முகமை (IEA), வளர்ந்த நாடுகளைத் தங்கள் எண்ணெய் இருப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், இந்தியா தனது இருப்பை வெளியிட மறுத்துவிட்டது. இது குறித்து இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “இந்த நெருக்கடி மற்றும் விலை உயர்வு இந்தியாவால் உருவாக்கப்பட்டது அல்ல. எனவே, இதற்குக் காரணமானவர்களே விலையைக் கட்டுப்படுத்தவும், நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு (LNG) தட்டுப்பாடு ஏற்படாது. போர் சூழல் நீண்ட காலம் நீடித்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை இந்தியா கொண்டுள்ளது” என்று உறுதியளித்துள்ளார். மேலும் சர்வதேச அரசியல் சூழல் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், இந்தியா இத்தகைய தற்சார்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.