இங்கிலாந்தில் 13 மாதமே ஆன பிரஸ்டன் டேவி என்ற தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் ஜேமி வார்லி மற்றும் ஜான் மெகோவன்-ஃபாசாகர்லி ஆகிய இருவருக்கு பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம், இக்குழந்தை மூச்சுப்பேச்சின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அது குளியல் தொட்டியில் மூழ்கிவிட்டதாக இவர்கள் பொய் கூறினர். ஆனால், உடற்கூறாய்வு சோதனையில் குழந்தை மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதன் உடலில் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் மற்றும் கடுமையான பாலியல் சித்திரவதைகளுக்கான அடையாளங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொடூரமான குற்றத்தை நிரூபிக்க காவல்துறையினருக்கு இவர்களின் மொபைல் போன்களில் இருந்த ஸ்னாப்சாட் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் பெரிதும் உதவின. அந்த மொபைல் தரவுகளின்படி, குழந்தை தத்தெடுக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஜேமி வார்லி குழந்தையை சித்திரவதை செய்யத் தொடங்கியதும், குழந்தையின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது பார்ட்னரான ஜானுக்கு ஸ்னாப்சாட்டில் அனுப்பியதும் உறுதியானது.

இந்நிலையில் இந்த டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், ஆசிரியர் மற்றும் நிதி மேலாளராகப் பணிபுரிந்து வந்த இவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.