வல்லரசு நாடான சீனா தற்பொழுது பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் அடுத்தகட்ட பாய்ச்சலாக, சாதாரணக் கொசுவின் அளவிலும் வடிவத்திலும் இருக்கும் ஒரு அதிநவீன மைக்ரோ ஸ்பை ட்ரோனை (Micro UAV) உருவாக்கி உலக நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ‘நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் டிபென்ஸ் டெக்னாலஜி’ (NUDT) என்ற ராணுவப் பல்கலைக்கழகத்தின் ரோபாட்டிக்ஸ் ஆய்வகம் இந்த விநோத ட்ரோனின் புரோட்டோடைப்பைத் தயாரித்துள்ளது.

வெறும் 0.3 கிராம் எடையும், 1 முதல் 2 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட இந்த மைக்ரோ ட்ரோன், இலை போன்ற இறக்கைகள் மற்றும் நூல் போன்ற மிக மெல்லிய கால்களுடன் பார்ப்பதற்கு அச்சு அசலாக நிஜக் கொசுவைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய அளவிலும், உலோகமற்ற லேசான பொருட்களாலும் செய்யப்பட்டுள்ளதால், இது மிலிட்டரி கிரேடு ரடார்களின் (Radar) கண்ணில் கூட மண்ணைத் தூவிவிட்டு மிக எளிதாக ஏமாற்றிவிடும்.

இதன் குட்டி உடம்பிற்குள் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன மைக்ரோ கேமராக்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் சென்சார்கள் மூலம், எவ்வித சத்தமும் இன்றி மிக ரகசியமாகப் போர் முனைகளிலோ அல்லது குறிப்பிட்ட இலக்குகளிலோ நுழைந்து ஆடியோ, வீடியோ மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் உளவு வேலைகளைச் செய்ய முடியும்.

தற்போதைய சோதனைக் கூட அளவில் ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த ‘மக்கர் கொசு’ ட்ரோனுக்கு, அதன் மிகக் குறைந்த எடையால் பலத்த காற்றில் பறக்க முடியாமல் வழிமாறிவிடும் குறைபாடும், மிகக் குறைவான பேட்டரி பேக்-அப் நேரமும் (Battery Life) சில மைனஸ் பாயிண்டுகளாக இருக்கின்றன.

இருந்தாலும், யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாகவோ அல்லது சிறிய ஓட்டை வழியாகவோ வீட்டிற்குள், அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தனிமனித ரகசியங்களை வேவுபார்க்கும் ஆபத்து இதில் உள்ளதால், “இனிமேல் எந்த இடமும் பாதுகாப்பானது இல்லை பாஸ், இந்த கொசுவை அடிக்க இனிமேல் வீட்ல வச்சிருக்க கரண்ட் பேட்டைத்தான் பயன்படுத்தணும் போல!” என்று சோசியல் மீடியா ஏரியாக்களில் நெட்டிசன்கள் தங்களது பயத்தையும் கலகலப்பான கமெண்ட்டுகளையும் காரசாரமாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.