கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கே ஊழியர்கள் அதிக விருப்பம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் அமாண்டா சூ தனது ஊழியர்களை வாரம் 5 நாட்களும் மகிழ்ச்சியுடன் அலுவலகத்திற்கு வரவழைக்க ஒரு புதிய யுக்தியைக் கையாண்டுள்ளார்.

மேலும் சான் பிரான்சிஸ்கோ நகரில் எரிபொருள் விலை மிக அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் அலுவலகம் வருவற்கான முழு எரிபொருள் செலவையும் நிறுவனத்தின் கார்டு மூலமாகவே செலுத்த அவர் வழிவகை செய்துள்ளார்.

இதனால் அலுவலகம் என்பது ஊழியர்களுக்கு வீட்டை விட மிகவும் எளிதான மற்றும் வசதியான இடமாக மாற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அமாண்டா லிங்க்டினில் பகிர்ந்துள்ளார். இதற்காக, எரிபொருள் செலவு மட்டுமன்றி அலுவலக பார்க்கிங் கட்டணம், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் சிற்றுண்டிகள் என ஊழியர்களின் அனைத்து தினசரி தேவைகளையும் நிறுவனமே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.

இந்நிலையில் ஊழியர்கள் பண விஷயத்திலோ அல்லது இதர செலவுகளிலோ கவனம் செலுத்தி தங்களது ஆற்றலை வீணடிக்காமல், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ‘பிரம்மாஸ்திரம்’ போன்ற மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.