சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு ஊழியரின் இரண்டு வரி ராஜினாமா மின்னஞ்சலும், அதற்கு அவரது மேலாளர் அளித்த நெகிழ்ச்சியான பதிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும் பொதுவாகவே வேலை விலகல் கடிதங்கள் நீண்ட விளக்கங்களுடனும் அல்லது அலுவலகப் பூசல்களுடனும் இருக்கும் நிலையில், எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த மின்னஞ்சல் உரையாடல் மிகவும் சுருக்கமாகவும், இரு தரப்பு மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. அந்த ஊழியர் தனது கடிதத்தில், “ஐயா, நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். எல்லாவற்றிற்கும் நன்றி” என்று மிக நேரடியாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த எளிய கடிதத்திற்கு மேலாளர் சௌரப் குப்தா அளித்த பதில் பலரின் இதயங்களை வென்றுள்ளது. அவர் தனது மறுமொழியில், “ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இங்கு திரும்பி வருவதற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த நேர்மறையான உரையாடல், கார்ப்பரேட் உலகில் ஆரோக்கியமான பணியிட சூழல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ஜூன் 15 அன்று பகிரப்பட்ட இப் பதிவு, தற்பொழுது 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.