இந்தியாவில் உள்ள அனைத்து உணவகங்கள், சமையலறைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் சமையலறைகளில் இருக்கும் துருப்பிடித்த மற்றும் உடைந்த கத்திகள் உள்ளிட்ட வெட்டுக்கருவிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் 15-ஆம் தேதியிட்ட இந்த அவசர அறிவுறுத்தலில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கத்திகள், பிளேடுகள் மற்றும் உணவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் உபகரணங்கள் துருப்பிடித்தோ, உடைந்தோ அல்லது சேதமடைந்தோ இருந்தால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, உணவு தயாரிப்பதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் கருவிகள் நச்சுத்தன்மையற்ற, துருப்பிடிக்காத மற்றும் தரமான பொருட்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், பல இடங்களில் இந்த விதிகள் மீறப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துருப்பிடித்த, பெயிண்ட் உதிர்ந்த அல்லது சேதமடைந்த கத்திகளைப் பயன்படுத்துவதால் உணவில் கண்ணுக்குத் தெரியாத வேதியியல் மற்றும் நுண்கிருமித் தொற்றுகள்ஏற்பட்டு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என்று FSSAI எச்சரித்துள்ளது. எனவே, குறைபாடுகள் உள்ள அனைத்துக் கருவிகளையும் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு, முறையான துப்புரவு மற்றும் கிருமிநாசினி நடைமுறைகளைப் பின்பற்ற உணவு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் உணவகங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி, விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு FSSAI உத்தரவிட்டுள்ளது.