தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் அதன் பின்னடைவுகளுக்கான காரணங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், தமிழகத்தின் தற்போதைய நிதிப் பற்றாக்குறை, பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் மற்றும் நிதிச் சீரமைப்பில் ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கான முக்கிய காரணங்கள் குறித்துப் பல்வேறு அதிரடி மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு, மாநிலத்தின் நிதிச் சீரமைப்பு எதிர்பார்த்தபடி அமையாமல் போனதற்கும், நிதி நெருக்கடி முற்றியதற்கும் அமைச்சர் மரியா வில்சன் 4 முதன்மைக் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். அதன்படி
வருவாய் ஆதாரங்கள் இன்றி இலவசத் திட்டங்கள்: கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான புதிய ஆதாரங்களை உருவாக்காமல், தொடர்ந்து இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தியது.
ஊழல் மற்றும் வரிச் சீர்திருத்தமின்மை: முறையான வரிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாதது மற்றும் கனிம வளம், பத்திரப்பதிவுத் துறைகளில் நிலவிய ஊழல்கள்.
மூலதன உருவாக்க இழப்பு: மூலதன உருவாக்கத்தில் (Capital Creation) மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் சுமார் ரூ. 28,217 கோடி ஆகும்.
பொதுத்துறை நிறுவனங்களின் சீர்குலைவு: பொதுத்துறை நிறுவனங்களில் நீண்டகாலமாக இருந்து வரும் அமைப்பு ரீதியான சிக்கல்களைச் சரிசெய்யத் தவறியது.
“நடப்பு நிதியாண்டிற்கான தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ. 1,32,208 கோடியாக உள்ளது. தமிழக வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட நிதிப் பற்றாக்குறைகளில் இதுதான் மிக அதிகபட்ச தொகையாகும்” என்று அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய ஒட்டுமொத்தக் கடனை விட, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்ட கடன் வரலாறு காணாத வகையில் ரூ. 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதும் இந்த நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது என அறிக்கையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சந்தித்து வரும் கடுமையான நிதி இழப்புகள் குறித்தும் அமைச்சர் விளக்கியுள்ளார். அதன்படி மாநில போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கும், ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கான செலவு ரூ. 78.81 ஆக உள்ளது.
ஆனால், அதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ. 25.97 மட்டுமே. இதன் காரணமாக, ஒவ்வொரு கிலோமீட்டர் இயக்கத்திற்கும் அரசுக்கு ரூ. 52.84 நஷ்டம் ஏற்படுகிறது.
இதன் ஒட்டுமொத்தப் பாதிப்பாக, போக்குவரத்துக் கழகங்களின் மொத்த நஷ்டம் ரூ. 72,667 கோடியைத் தொட்டுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் இந்த தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் கடன் சுமை, அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
