ஈரான் நாட்டில் வேலை வாங்கி தருவதாக நடக்கக்கூடிய மோசடி சம்பவங்கள் பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் இருப்பதாவது, ஒரு சில ஏஜெண்டுகள் இந்திய நபர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறுகின்றனர். மேலும் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி வருகின்றனர். இவர்கள் சொல்வதை உண்மையென நம்பி ஈரானுக்கு செல்லக்கூடிய இந்தியர்கள் அங்குள்ள கும்பல்களால் கடத்தப்பட்டு பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களை விடுவிக்க குடும்பத்தினரிடம் இருந்து பணம் கேட்டு அந்த கும்பல்கள் மிரட்டல் விடுவதாக அரசுக்கு தெரியவந்துள்ளது. அண்மைக் காலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்து இருப்பதால் போலியான உறுதிமொழிகளை நம்பி இந்தியர்கள் ஏமாறாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.
