மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குள் உள்ள கூடல்நகர் 2-வது வார்டில் கரிசல்குளம் கண்மாயை கடக்கும் மறுகால் வாய்க்காலுக்கு குறுக்காக புதிய பாலம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணி ரூ.25 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது. இந்த மேம்பாட்டு பணிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய பிரமுகருமான செல்லூர் கே. ராஜுநேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, நடிகர் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து விமர்சனமாக பேசினார். “விஜய் பனையூரில் இருந்து வெளியே வராமல் அரசியல் பேசுவதால் அவர்மீது விமர்சனங்கள் எழுகின்றன. தற்போது அனைத்து தலைவர்களும் மக்களிடையே நேரில் சென்று அரசியல் செய்கிறார்கள். ஆனால், ‘இமேஜ்’ மற்றும் ஸ்டைல் மட்டும் வைத்து வெற்றி பெறலாம் என நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்கள் வெளியே வந்தால் குழப்பம் ஏற்படும் என கூறுவது தவறு. விஜய் வெளியில் வந்து மக்களை நேரில் சந்திக்க வேண்டும்,” என்றார்.
மேலும், “எல்லோரும் எம்.ஜி.ஆராக வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனால் எப்போதும் எம்.ஜி.ஆர் ஒருவர்தான். எடப்பாடி பழனிசாமி இன்று மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளவர். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் உருவாகிறது. இது மக்கள் நம்பிக்கையின் சான்றாகும். எனவே, அரசியலில் வெற்றிபெற விரும்புவோர் நேரில் களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் செயல்படவேண்டும்,” என கூறினார்.
