திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பான சம்பவம் மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகன் பழனி தொகுதி எம்எல்ஏ செந்தில் குமார் மற்றும் மகள் இந்திரா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று அதிகாலை 7:30 மணி முதல் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் அசோக் நகர், வள்ளலார் நகர், சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகள் 11 மணி நேரத்திற்கு மேல் நீடித்தன. அதிகாரிகள் துப்பாக்கியுடன் வந்த CRPF பாதுகாப்புடன் வீடுகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சோதனை நடைபெறும் போது திமுகவின் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற தொண்டர் திடீரென அமைதியை கலைத்து அதிர்ச்சிக்குள்ளாக செய்தார். அமைச்சரின் வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் கொண்டு வந்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவரை அங்கு கூடியிருந்த பிற தொண்டர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டின் வாசலில் வந்து, தொண்டர்களிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, அதிகாரிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கூறிய பின் மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.
இதையடுத்து, திமுக நிர்வாகிகள் அனைவரும் தொண்டர்களிடம் வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டும், அவர்கள் அதை ஏற்க மறுத்தும் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சுமார் 11 மணி நேர சோதனைக்கு பின், அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடுகளிலிருந்து வெளியேறினர். திமுக தொண்டரின் தீக்குளிக்கும் முயற்சி தணிக்கப்பட்டதும், போலீசார் பாதுகாப்பு முறைமைகளை தீவிரமாக்கினர். இந்த சம்பவம், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
