‘பருத்திவீரன்’, ‘வைதேகி வந்தாச்சு’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரபல சினிமா நடிகர் சரவணன் மீது, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு கோரி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு நடிகர் சரவணனைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூர்யஸ்ரீக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை சரவணன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
மவுலிவாக்கத்தில் உள்ள ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்எதிர் வீடுகளில் வசித்தும் இருவரும் பேசிக்கொள்ளாத நிலையில், சரவணன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவிக்கவிடுவதாகவும் கூறி சூர்யஸ்ரீ ஏற்கனவே ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில், சூர்யஸ்ரீக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 2-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில், சூர்யஸ்ரீ தங்கியிருந்த வீட்டின் கண்காணிப்புக் கேமரா (CCTV) திடீரென அகற்றப்பட்டதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர் மீண்டும் போலீசில் புகார் செய்துள்ளார்.
தன்னிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சரவணன் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், தற்போது கேமரா அகற்றப்பட்டிருப்பதால் தனக்கோ அல்லது தனது உடமைகளுக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு நடிகர் சரவணனே முழு காரணம் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
