விருதுநகர் மாவட்டம் துய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் மாரிமுத்து (29). இவரது மனைவி சத்யா (24) உடன் குடும்பத் தகராறுகள் காரணமாக சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சத்யா தனது தாய் இருளாயி (வயது 70) உடன் வசித்து வருகிறார். இவர்களது இரண்டு குழந்தைகளில் ஒருவர் இருளாயி பராமரிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை, மாரிமுத்து மாமியார் இருளாயியின் வீட்டுக்குச் சென்று, தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இருளாயி மறுத்ததையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, கோபம் அடைந்த மாரிமுத்து, வீட்டருகிலுள்ள கிணற்றுக்குள் இருளாயியை தூக்கி வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், கிணற்றில் தண்ணீர் இருந்ததால் மூதாட்டி காயமின்றி தப்பியுள்ளார். ஆனால் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், அவரது கத்தல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் திருச்சுழி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனர். பின்னர், அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.