கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் மருத்துவ பரிசோதனையின் போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, காலாண்டு விடுமுறையையொட்டி, சில நாட்களுக்கு முன் தனது தாயை பார்க்க நாகர்கோவிலுக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று, மாணவி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து, அவரது தாயார், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தைகள் நலவாரிய அலுவலர்களுக்கு உடனடி தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற குழந்தைகள் நல அலுவலர்கள், மாணவியிடம் விசாரணை நடத்தியபோது, மாணவி எந்த பதிலும் வழங்காமல் மவுனமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவிக்கு உடனடி சிகிச்சை அளிக்க, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி வைக்கப்பட்டது. மேலும் மாணவி, கருங்கல் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்த நிலையில், குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்திற்கு காரணமான நபரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
