“இன்ஸ்டாகிராம்  வாயிலாக மக்களின் மனநிலையை மாற்றித் தேர்தலில் வாக்குகளைப் பெற முடியும் என்ற வெளிநாட்டு உத்தியை, தற்போது தமிழக வெற்றிக் கழகம் மூலம் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றியுள்ளனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக உள்கட்சிக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர  பேசியதாவது, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தமிழகத்தில் யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திடீரென ஏற்பட்ட ஒரு தேர்தல் சுனாமியில் சிக்கி, மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன் என்றார்.

தொடர்ந்து வாக்கு விவரங்கள் குறித்துப் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் புதியதாகக் களம் கண்ட த.வெ.க தலைவர் விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும், பாரம்பரியமாக அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளே ஆகும். ஆளுங்கட்சியான திமுகவின் வாக்கு வங்கி எங்கும் சிதறாமல், அப்படியே மீண்டும் திமுகவிற்கே சென்று சேர்ந்துள்ளது. நமது வாக்குகள் பிரிந்ததே இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு முக்கியக் காரணமாகும்.

அதிமுகவின் தற்போதைய உள்கட்சிச் சூழல் மற்றும் சில கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசப்படுகிறது. கட்சியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிறிய விரிசல்களைக் கட்சித் தலைமை மிகச் சரியாகக் கையாண்டு, சரிசெய்து கொள்ளும்” என்று நம்பிக்கையூட்டினார்.

கட்சியின் கட்டமைப்பு குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயலாற்றுவது காலம் நமக்குத் தந்த கொடையாகும். எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்று இந்தத் தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் தங்களின் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள். எனவே, அதிமுகவை மக்கள் அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார்கள்.

எப்போதும் அதிகாரத்திலேயே நீடிக்க வேண்டும், அப்போதுதான் ஒரு பேரியக்கத்தை நடத்த முடியும் என்ற அவசியமான நிலைப்பாடு அதிமுகவுக்குக் கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொண்டர்களின் பலத்தால் தொடர்ந்து மக்கள் பணியாற்றும் ஆற்றல் இரட்டை இலைக்கு உண்டு” எனத் தெரிவித்தார்.