“தமிழக வெற்றிக் கழகத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்த 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிக்கப்படுவது உறுதி; இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றம் வாயிலாக நீதியை நிலைநாட்டுவோம்” என்று அதிமுக முன்னாள் எம்பி சிவசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி, கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசியதாவது, “அதிமுக இயக்கம் இன்னும் நூறாண்டுகள் கடந்தும் மக்களுக்காகச் சேவை செய்யும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அன்றே பிரகடனம் செய்தார். அதற்கேற்ப, இந்த இயக்கம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஏற்பட்ட பிளவை சரிசெய்து, ஜெயலலிதா கட்சியை இமய உயரத்திற்குக் கொண்டு சென்றார். அவரது மறைவுக்குப் பின், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட வழிநடத்தி வருகிறார். சாதாரணத் தொண்டனாகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, இன்று பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கும் எடப்பாடியாரின் உழைப்பை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவுக்கு தற்போது வந்துள்ள சவால்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தங்களின் சொந்த லாபத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும் சிலர் தடம் மாறி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் அதிமுக இப்போது முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தில் இருந்து சுயநலவாதிகள் ஒருவர் வெளியேறினால், தூய்மையான தொண்டர்கள் 100 பேர் உள்ளே வருவார்கள் என்பதுதான் இந்த இயக்கத்தின் வரலாறு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், தவெக தலைவருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகளை, அந்த கணமே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியிருப்பார்” என்று உள்கட்சி துரோகங்களைச் சாடினார்.

தவெக-வுக்கு ஆதரவாகச் செயல்படும் 25 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கக் கோரி சபாநாயகருக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இதற்கு உரியப் பதிலை அளிக்காவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி அவர்களின் பதவிகளைப் பறிப்போம். அதன்பின் வரும் இடைத்தேர்தலில் எடப்பாடியார் யாரைக் கை காட்டுகிறாரோ, அவரே வேட்பாளராகக் களம் இறங்கி வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவார். ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டுவது வழக்கம் தான் என்றாலும், தற்போதைய சூழலில் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய அவசியம் எழவில்லை எனத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், “கடந்த காலத் தேர்தல்களில் அதிமுக சந்தித்த பின்னடைவுக்கு, நான் உட்பட நம்முடைய நிர்வாகிகள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டும். நாம் நமது சொந்தப் பிள்ளைகளிடமே அதிமுகவின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, இரட்டை இலைக்கு வாக்களிக்க வலியுறுத்தத் தவறிவிட்டோம். இனி வரும் காலங்களில் இந்தத் தவறைச் சரிசெய்து, பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.