அரசு அலுவலகங்களுக்குத் தாமதமாக வரும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ‘செக்’ வைக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 01, 2026) முதல் அதிரடியான புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்துள்ளது!
மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளரின் அதிரடி அறிவுறுத்தலின் படி, இன்று முதல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து ‘பயோமெட்ரிக்’ முக அடையாள அங்கீகார (Face Recognition) முறையில் தங்களது வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனத் துணைச் செயலாளர் தங்கபாப்பா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்திலேயே விரல் ரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறைக்கு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த ‘ஃபேஸ் ரீடிங்’ சிஸ்டம் டக்கென அமல்படுத்தப்பட்டுள்ளது.
இனி முக அடையாளப் பதிவு மட்டுமின்றி, வருகைப்பதிவேட்டிலும் கையெழுத்திட வேண்டும் மற்றும் எப்போதும் அடையாள அட்டையை (ID Card) கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் போன்ற கறாரான கமாண்டுகள் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு போடப்பட்டுள்ளது.
