அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர தொண்டர் மன வேதனையடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள அதிமுக ஐடி அணியின் செயலாளர் ராஜ் சத்யன், சுயநல அரசியலால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களை இனியும் இதுபோன்று மன வேதனை அடைய விடாதீர்கள் என்று தலைமைக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதாவது உயிரிழந்த தொண்டர் மகேந்திரன் தனது இறுதி வீடியோவில், தேர்தல் படுத்தோல்விக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்களால் தான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவினர் இனியாவது தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட்டு, மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தொண்டர்களின் இந்த மனக்குமுறலை உணர்ந்து, கட்சியின் எதிர்கால நலன் கருதி மூத்த தலைவர்கள் தங்களின் பிடிவாதங்களைக் கைவிட்டு, இளைஞர்களிடம் தலைமைப் பொறுப்புகளை ஒப்படைக்க முன்வர வேண்டும் என ராஜ் சத்யன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
