உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்குத் தவிர்க்க முடியாத செயலியாக விளங்கும் வாட்ஸ்அப்பில், விளம்பரங்கள் இல்லாத தடையற்ற சேவையைப் பெற புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடி மக்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியுடன் அறிமுகமான இச்செயலி, காலப்போக்கில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிரும் வசதிகளை மேம்படுத்தியது. குழு அரட்டை (Group Chat), ஸ்டேட்டஸ் (Status) போன்ற வசதிகளால் தொழில்நுட்ப உலகில் வாட்ஸ்அப் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் வருவாயைப் பெருக்கும் நோக்கில், அதன் ‘ஸ்டேட்டஸ்’ பகுதியில் விளம்பரங்களைக் கொண்டு வரப்போவதாக மெட்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது பயனர்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பரங்கள் தோன்றி வருகின்றன. இது பல பயனர்களுக்கு எரிச்சலையும், இடையூறையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விளம்பரங்கள் இல்லாத பிரீமியம் (Ad-free) சேவையை விரும்பும் பயனர்களுக்காகப் புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்டா முடிவு செய்துள்ளது. இதன்படி: முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் இந்தச் சேவை அறிமுகமாகிறது. இதற்கு மாதத்திற்கு சுமார் 4 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.433) வசூலிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரங்களால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க விரும்புவோருக்கு இது ஒரு மாற்றாக அமையும்.
மேலும் சாதாரணப் பயனர்களுக்குப் பழையபடியே விளம்பரங்களுடன் கூடிய இலவசச் சேவை தொடரும் என்றாலும், கட்டணத் திட்டத்தின் அறிமுகம் டெக் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
