அமெரிக்காவில் விசா விதிமுறைகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு சென்று குழந்தை பெற்றுக்கொண்டு, அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிப்பதாக சிலர் செயல்படுவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் சுற்றுலா விசா பெற முயற்சித்தால், அவர்களுக்கு விசா வழங்கப்படாது என அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஒரு பயணியின் அமெரிக்கப் பயணத்தின் முதன்மை நோக்கம் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக அங்கு பிரசவம் செய்வதே என்று அதிகாரிகள் நம்பினால், அந்த நபரின் சுற்றுலா விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இத்தகைய பயணம் அனுமதிக்கப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு, விசா பெற விரும்புவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பிரசவ சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.