கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் புற்றுநோயால் உயிரிழந்த இந்து முதியவர் ஒருவரின் உடலை வாங்க சொந்தக் குடும்பத்தினரே மறுத்த நிலையில், முஸ்லிம் பெண் ஒருவர் இந்து சாஸ்திரங்களின்படி இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் மாபெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

நாராயணன் (64) என்ற முதியவர்  நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கடையின் வாசலில் ஆதரவற்றுக் கிடந்தபோது மாவட்ட பஞ்சாயத்தின் வளர்ச்சித் துறைத் தலைவர் இர்ஃபானா இக்பால் மற்றும் தொண்டு நிறுவன தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

நாராயணனின் மரணத்திற்குப் பின் அவரது குடும்பத்தினர் உடலைத் தகனம் செய்ய முன்வராததால், பஞ்சாயத்து தலைவி இர்ஃபானா இக்பாலே முன்னின்று இந்து மத ஆச்சாரங்களின்படி அவரது இறுதிச் சடங்குகளை மனிதாபிமானத்துடன் செய்து முடித்துள்ளார்.

மதப் பிரிவினைகளைக் கடந்து மனிதநேயமே ஆகச்சிறந்தது என்பதை நிரூபித்துள்ள இர்ஃபானாவின் இந்த நெகிழ்ச்சியான செயல் ஒட்டுமொத்த இந்தியாவையே தலைவணங்க வைத்துள்ளது.