தேசிய மகளிர் ஆணையம் நேற்று (ஆகஸ்ட் 28) ‘பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள் – 2025’ பட்டியலை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12,770 பெண்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழுவே இந்த ஆய்வில் ஈடுபட்டது.

அதில், நாகாலாந்தின் தலைநகரான கோஹிமா பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கொண்ட நகரமாக முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு மரியாதை, நிகழ்வுகளில் பங்குபற்றும் வாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம், பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன. அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள் இல்லாமை, போதிய வசதிகள் குறைவாக இருப்பது, ஆணாதிக்க முறைகள் அதிகம் காணப்படுவது காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை போன்ற நகரங்கள் சிறந்த பாதுகாப்பான இடங்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் பின்தங்கியுள்ளன.

ஆய்வில், மொத்தத்தில் 60% பெண்கள் தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40% பெண்கள் பாதுகாப்பு இல்லை எனவும் கூறியுள்ளனர். கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86% பெண்கள் கூறினாலும், இரவில் மற்றும் கல்வி வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91% பெண்கள் கூறியிருந்தாலும், பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் பாதுகாப்பு புகார்களில் திறம்பட செயல்படுவார்கள் என்று 25% பெண்கள் மட்டுமே நம்புவதாகவும், பொதுமக்கள் இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்ததாக 7% பெண்களும், 24 வயதிற்குக் குறைவான இளம்பெண்களில் 14% பேரும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, துன்புறுத்தலுக்கான முக்கிய இடங்களாக சுற்றுப்புறங்கள் (39%) மற்றும் போக்குவரத்து இடங்கள் (29%) சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முக்கியமாக, பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் மட்டுமே புகார் அளிக்கிறார்கள்; மீதமுள்ள பெரும்பாலான துன்புறுத்தல்கள் பல்வேறு காரணங்களால் புகார் அளிக்காமல் விட்டுவிடப்படுகின்றன என அறிக்கை தெரிவித்துள்ளது.