சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 16 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 10-11 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள், எந்த பயமுமின்றி சாலையில் ஸ்கூட்டர் ஓட்டுவது பதிவாகியுள்ளது.

ஒரு சிறுவன் ஸ்கூட்டரை திறமையாக ஓட்ட, மற்றொருவன் பின்னால் அமர்ந்திருக்கிறான். ஆனால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுவர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதையோ, காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்பதையோ கவனிக்காமல், சட்டத்தை மீறி ஸ்கூட்டர் ஓட்டுவதாக வீடியோவில் தெரிகிறது.

இந்த வீடியோவை “இருவரின் வயதையும் சேர்த்தாலும் 18 ஆகாது” என்ற தலைப்புடன் பகிரப்பட்டு, 44,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, “இப்படிப்பட்ட சிறுவர்கள் பின்னாளில் சட்டத்தை மீறுவதில் முதலிடம் பிடிப்பார்கள்” என்றும்,  “பெற்றோர்கள் இவ்வளவு சிறிய வயதில் குழந்தைகளுக்கு வாகனம் கொடுப்பது தவறு” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பயனர், “இப்படி செய்தால், விபத்து ஏற்பட்டு பெற்றோர்கள் பின்னர் போராட்டம் நடத்துவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்பு குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.