உலகம் எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும், மூடநம்பிக்கையின் பிடியில் இன்னமும் சிலர் உயிரிழப்புக்கு காரணமாகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுள்ளது.
அங்கு வசிக்கும் காமினியின் மகன் பியூஷ் (17), 11ஆம் வகுப்பு மாணவர், இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த தாய், போலீசில் புகார் அளித்தார். தேடுதல் நடத்திய போலீசார், ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் பல்வேறு உடல் பாகங்களை கண்டுபிடித்தனர். அடையாளம் மூலம் அது காணாமல் போன பியூஷ் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் துணியால் போர்த்தப்பட்ட பொருளை ஓடையில் வீசியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த அடையாளத்தின் அடிப்படையில், பியூஷின் உறவினரான சரண்சிங்கை கைது செய்தனர். அவர், தனது தம்பியின் பேரனாகிய பியூஷை கடத்தி கொன்றதை ஒப்புக்கொண்டார்.
“என் மகன் 2023இல் தற்கொலை செய்தார்; அடுத்த ஆண்டு என் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டார். இது குடும்பத்தின் மீது ஏற்பட்ட சாபம் காரணமாகவே நடந்ததாக சிலர் கூறியதால், உள்ளூர் மந்திரவாதியை சந்தித்தேன். அவர், ‘உனது தம்பியின் பேரன்தான் காரணம்; அவனை பலி கொடுத்தால் துன்பம் நீங்கும்’ என்று கூறினார். அதன் அடிப்படையில் பியூஷை நரபலி கொடுத்தேன்” என போலீசில் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்.
சரண்சிங், பியூஷை தலை துண்டித்து கொன்றதோடு, உடலைப் பல துண்டுகளாக வெட்டி ஓடையில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூடநம்பிக்கையின் பெயரில் நிகழ்ந்த இந்த நரபலி சம்பவம் பிரயாக்ராஜ் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சரண்சிங் போலீஸ் காவலில் இருப்பதோடு, மந்திரவாதியின் பங்கையும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
