இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ராணுவத்தில் ‘லெப்டினன்ட் கர்னல்’ பதவியுடன் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
அரியானாவைச் சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகள் என பல்வேறு சர்வதேச அரங்குகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்த சீசனில் அவர் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து புதிய சாதனையை படைத்திருந்தார்.
2016ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த நீரஜ், தொடர்ந்து சுபேதர் மேஜர் பதவிவரை உயர்ந்திருந்தார். இந்நிலையில், அவரின் சிறப்பான விளையாட்டு சாதனைகளையும், தேசத்திற்கான பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில், அவருக்கு ‘லெப்டினன்ட் கர்னல்’ என்ற சிறப்பு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. விழாவில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, நீரஜ் சோப்ராவுக்கு அந்தப் பதவியை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: “லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசத்தின் பெருமையை பிரதிபலிக்கும் வீரர். விளையாட்டு சமூகம் மற்றும் ஆயுதப்படையினருக்கு தலைமுறைகள் கடந்தும் உத்வேகம் அளிப்பார்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, மூத்த அதிகாரிகள், மற்றும் சோப்ராவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த அங்கீகாரம், நீரஜ் சோப்ரா தடகளத்தில் சாதித்த வெற்றிகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவித்த பங்களிப்பையும் சிறப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப்படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற மிகச்சில விளையாட்டு வீரர்களின் வரிசையில் நீரஜ் சோப்ரா இணைந்துள்ளார்.
